நான் விளையாடிய கடற்கரை. . .

இரண்டு வருடங்களுக்கு முன்புவரை இந்த மண்ணில் எத்தனை கதைகள் எவ்வளவு விளையாட்டுக்கள். ஒவ்வொரு பௌர்ணமியிலும் கூட்டமாக நண்பர்களோடு அரட்டையடடித்த, குளித்துமகிழ்ந்த கடற்கரை.கல்லடிக் கடற்கரைக்கு போகாத மட்டுநகரவாசிகள் மிகக் குறைவு.2004 சுனாமிப் பேரலை வருவதற்கு முன்புவரை மகிழ்விக்குமிடம் இப்போது மரணித்துப் போனவர்களின் நினைவுகளைத் சுமந்தபடி . . .

இலங்கையின் கிழக்குப் பகுதி கடற்கரைகளில் அழகுக்கு பஞ்சமிருக்காது.மட்டக்களப்பு நகரில் இருந்து 5 கிலோமீற்றர் தொலைவிலிருக்கும் கல்லடிக் கடற்கரை தினமும் சுறுசுறுப்பான இடம்.அருகே இருக்கும் இலங்கை இராணுவத்தின் பாரிய முகாமைத் தவிர இந்த கடற்கரைக்கு வேறு தொல்லைகள் எதுவும் இல்லை.மட்டக்களப்பில் இராணுவம் பயிற்சி எடுக்கும் பிரதான முகாம் இங்குதான் உள்ளது. ஒவொரு நாளும் பல மனி நேரம் கடலை நோக்கி அவர்கள் சுடுகிற சத்தம் காதடைக்க வைக்கும்.இதனால்தான் என்னவோ கடலுக்கு கோபம் வந்து ஏராளமான இராணுவத்தினரையும் சேர்த்து 2004 டிசம்பர் 26 ல் பலிவாங்கியிருகிறது.

இந்த இராணுவ முகாமில்தான் 90களிலும் அதற்கும் முன்பும் ஏராளமான தமிழ் போராளிகள் சிறை வைக்கப் பட்டிருந்தார்கள் பல இளைஞர்கள் கொலை செய்யப் பட்டதும் இந்த முகாமில் வைத்துத்தான்.
மட்டக்கள்ப்பு முகத்துவாரத்தில் இருந்து தொடங்கும் நீணடகடற்கரை பொத்துவில் வரை நீண்டு செல்கிறது. இந்த நீண்ட பகுதியின் மிக அழகான மக்கள் இளைப்பாறூம் கடற்கரைப் பகுதியே கல்லடி கடற்கரை

இந்த கடற்கரையில் ஒரு மாதா கோயில் இருந்தது செவ்வாய்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் இங்கு மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு நடத்தப் படும். நாம கண்டிப்பா ஞாயிற்றுகிழமை போவம் அப்பதான் நிறய கூட்டம் வரும்.( நிறையப் பொம்பிளப் பிள்ளையளும் வரும்...ஹி...ஹி..)மறுகா அங்க நாவலடி ரோட்டில இருகிற கிழங்கு கடையில் கிழங்கு வாங்கித்து கடற்கரையில இரிந்தமெண்டா ஆமிகாரன் வீட்ட பொக சொல்லும் வரைக்கும் அங்கதான் கிடப்பம்.(அப்பப்ப மட்டக்களப்பு தமிழ் சொல்லுறன் முழுதையும் பேச்சுவழக்கில எழுதினா நிறயப் பேருக்கு புரியாது.)



(மேலே உள்ள படத்தில் உள்ளதுதான் மாதா கோவில் சுனாமி நடந்த மறுவாரத்தில் இந்த எடுத்தது.)


[மட்டக்களப்பு கிழங்கும் பாபத்தும் பிரபல்யமான மாலை நேர சிற்றூண்டிகள் இன்னுமோரு பதிவில் அவற்றைப் பற்றி விபரமமக சொல்லுறன்.]


பீர் போத்தல்கள் சகிதம் நம்மட பெடியளெல்லாம் கடல்ல குளிப்பாங்கள்(நான் அப்ப குடிக்கிறதுக்கு எதிர். . நம்புங்க).காலையில போனா மத்தியானத்துக்கு மேலையும் அங்க இருந்து நிறைய விளையாடுவம்.கடற்கரைத் தென்னமரங்களில இளநீர் புடுங்கிக் குடுடிப்பம், கடற்கரைக் கால்ப் பந்தாட்டம், மல்யுத்தம்,கிறிகெற், கபடி இப்படி விளையாடுறதும் காத்தான்குடியில வாங்கி வந்த சமுசா(உள்ள மாட்டீறச்சி போட்டிரிக்கும்)
இறச்சிப் பொரியல், கிழங்கு பொரியல், பாபத் எண்டு சாப்பிடுறது எந்த ஊரிலையும் கிடைக்காதவொன்று.

ஒருமுறை நாங்கள் செய்யுறது போல கடற்கரையில ஒரு மகளிர் பாடசாலைப் பிள்ளையளும் பியரடித்த்தாக கதை வந்தது அதுக்கு பிறகு பெடியங்கள் அந்த பாடசாலைப் பிள்ளையள் எல்லாரையும் இதச் சொல்லி பகிடி பண்ணுவாங்கள். இது ஒரு காலாசர சீரழிவெண்டு நாங்களும் பட்டிமன்றத்தில பேசினாங்கள். பத்திரிகையிலையும் இப்பிடியொரு விசயம் நடந்ததாய் கிசுகிசு வில போட்டவனுகள். இப்ப இதை நினைக்க வெட்கமாய் எனக்கு இருக்கு எவ்வளவு மோசமான ஆண் மனோநிலையில் நாங்கள் வளர்க்கப் பட்டிருகிறோம்.என்னைப் போல் அனுபவத்தை அங்கிருந்த ஒரு பெண்ணால் எழுத முடியுமா?
கடற்கரையில் பியரடிப்பதும் பின்னர் குளிப்பதும் தவறானது. அது யாராகவிருந்தாலும். அந்தக் கடற்கரையில் எனக்கு தெரிந்து ஆறேழு பேர் கடலில் குளிக்கும் போது இறந்திருப் பார்கள்.

முழுநிலா வரும் நாட்களில் எக்கச்சக்க கூட்டம் வரும் நாங்களும் கண்டிப்பக போவம். ஆண்கள் பாடசாலயில் படிக்கும் எங்களுக்கு சக மாணவிகளைப் பார்த்து சிரிப்பதற்காவது கிடைக்கும் அரிய சந்தர்ப்பம்.இந்த நேரத்தில் குடும்பம் குடும்பமாக வருவார்கள். நண்பர்களுக்கு காதலியைக் காட்டுவதற்கும் இந்த பொழுதே உதவியது.பெரும்பாலும் பெண்களும் இப்படியே செய்தார்கள்.(சோமிட மாமாவு குடும்பமாய் வாரார்டோய். . . நண்பர்கள் கத்தியது நினைவிருகிறது. )

முதல் ஒருகாலத்தில் பிரச்சனை பெரிசா இல்லாத போது இந்த கடற்கரையில் சிறிய ஊணவகம் தங்கும் விடுதி ஒன்று இருந்ததெண்டும் அப்பவெல்லாம் அடிகடி காணிவெல் நடக்குமெண்டும் பெரியாக்கள் சொல்லுவாங்கள். நான் அறிஞ்சு ஆமி காட்டுற காணிவெல்லத்தவிர வேறயேதும் நடக்கையில்ல(?) ஆனால் அந்த கடற்கரைக்கு ஏதோ ஒரு சிறப்பு இருந்தது.

மட்டக்களப்பில் நடக்கும் அம்மன் சடங்குகளின் இறுதியில் உருவாடும் தெய்வங்களும், பூசாரிகளும், பொது மக்களும் இங்கு வந்து பூசை நடத்துவது வழமை. தாமரைக்கேணி மாரியம்மன் திருவிழாவின் போது பலமுறை நான் இப்படிப் போயிருகிறேன்.இது தவிர சில ஆகமக் கோவில் சாமிகள் தீர்த்தத் திருவிழவின் போது இங்கு தீர்த்தமாடுவதுமுண்டு.

இங்கு ஒரு பகுதியில் மீன்பிடிப்பார்கள் இந்தபகுதி முழுவதிலும் மீன்வாடிகளைப்(மீனவர் ஒYவெடுக்கும் இடம்) பார்க்கலாம்.ஏலேலோ பாட்டு பாடிய படியே கரைவலை போட்டு இழுத்து வருவார்கள் எக்கச்சக்க மீன் படும் அப்ப பக்கத்தில நிண்டா நல்ல மலிவா மீன் வங்கலாம். எனக்கு பிடித்த மான மாப்பிளைக்கீரி மீன் சில காலங்களில் அதிகம் பிடிபடும்(இதை தமிழகத்தில் மத்தி மீன் என்கிறார்கள்.

மட்டக்களப்பு நகரத்தில இருந்து மூன்று சோதனைச் சாவடிகளைக் கடந்து கடற்கரைக்கு சென்று விட்டு வீடு திரும்புவது என்பது ஒரு சுகமான அனுபவம்.இன்று தொடர்பில் கூட இல்லாத என் நண்பர்கள் பலருக்கும் இன்னமும் இந்த நினைவுகள் இருக்கலாம்

இன்று . . .

"கடற்கரைக்கு முதல் நாம போன போல இப்ப போறல்லடா அதுக்கு சுனாமி மட்டும் காரணமில்ல அங்க நிக்கக்குள்ள யார் எப்ப எவன கடத்துவானெண்டு தெரியா இப்ப வேலைக்கு போயித்து வந்தா வீட்டுகுள்ள கிடக்குறதான்.எப்பயாவது கடற்கரை எப்பிடியிருகெண்டு போயி பாப்பம். கிழங்குக் கடையளும் குறைஞ்சு போயித்து" என்று எனது நண்பன் நான் போனபோது சொன்னான்.

ம்......பெருமூச்சு விட்டபடியே மீண்டும் பழைய நினைவுகளை அசைபோட்டபடி கனவுகளுக்காக தூங்குவதைத் தவிர என்னால் என்ன செய்ய முட்யும்.

மதுரையில் ஆவணப்பட விழா. . .

இந்திய மற்றும் உலக ஆவணப் படங்களின் திரைப்படவிழாவொன்று மதுரையில் கடந்த புதன்கிழமை தொடங்கி நடை பெற்று வருகிறது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த விழா நிறைவு பெறூகிறது.காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை ஏராளமான ஆவணப்படங்கள் திரையிடப் படுகின்றன. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள முத்தா அரங்கில் இந்த திரைப்படவிழா சனி, ஞாயிறு இரண்டு தினங்களும் நடைபெறும்.ஏற்கனவே மதுரையின் பல இடங்களிலும் கடந்த மூன்று நாட்களாக இந்த விழா நடைபெற்றது.

இந்த திரைப் பட விழாவில் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை எனது ஆவணப்படம் ஒன்றும் திரையிடப் படுகிறது.கடலூர் சிப்காட் பகுதி மக்களின் அவலம் நிறைந்த வாழ்க்கையினைப் பதிவு செய்யும் எனது படம் முதன் முதலாக இந்த திரைப்படவிழாவில் திரையிடப் படுகிறது.

கடலுரில் 20 கிராமங்களைக் கொண்ட மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் அமைக்கப்பட்ட 19 கம்பனிகளின் காரணமாக நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருக்கும் மக்களின் அவலத்தைப் பதிவு செய்துள்ளேன்.இப்போது புதிதாக மேலும் 4 பெரிய கம்பனிகள் தங்கள் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்துள்ளன.

22 வருடங்களுக்கு முன்னர் 1984 டிசம்பர் 3 ஆம் திகதி போபால் பிரதேசத்தில் 'யூனியன் காபைற்' கம்பனியில் ஏற்பட்ட விசவாயுக் கசிவில் 18,000 பேர் இறந்து போனார்கள். அதன் பின்னரும் பாடம் படிக்காத அரசு கடலூரில் மக்கள் வாழ்விடங்களில் அபாயகரமான இரசாயனக் கம்பனிகளைக் கட்டுவற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இத்தகைய நிலைகாரணமாக விரக்கதி அடைந்துள்ள மக்களின் வாழ்க்கையும், வேதனையும், இயலாமையுமே எனது படம். கம்பனிகளிலும் வேலை கிடைக்காமல் பாரம்பரியமான மீன்பிடி மற்றும் விவசாயத் தொழில்களையும் இழந்து நிராதராவாக இந்த மக்கள் நிற்கின்றனர்.நான் சந்தித்த சிறுவர்களைத் தவிர மற்றய எல்லோருமே தமது இயலாமையினைத் தெரிவித்தனர்.

ஆனாலும் அந்த சிறூவர்களிடம் கோபமும் வீரமும் தெரிந்தது. அவர்கள் பேச்சில் வெடிக்கப் போகும் போராட்டம் ஒன்றுக்கான எச்சரிக்கை தெரிந்தது. மக்களிடம் எப்போது எப்படி போராட்டம் வன்முறையாக மாறும் என்பது அந்த சிறுவர்கள் சொன்ன வாசகங்களில் இருந்து நான் தெரிந்து கொண்டேன். இன்றைக்கு இந்த மக்களுக்கு தீர்வு கொடுக்கப் படாவிட்டால் இந்த மக்களிடம் இருந்து உருவாகும் வன்முறைப் போராட்டத்தை நாம் எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதே எனது புரிதலாக இருகிறது.

மதுரை நண்பர்கள் உங்களூரில் நடக்கும் இத்தகைய விழாக்களுக்குச் செல்வது ஏற்பாடாளர்களுக்கு உந்துதலையும் உங்களுக்கு அனுபவத்தையும் தரும்.ஆலபனைகள் அற்ற உண்மையான மக்களையும் வாழ்வையும் ஆவணப் படங்களிலேயே காண முடியும்.தமிழகத்தில் இப்போது ஆவனப் பட விழாக்கள் அதுவும் சர்வதேசப் படங்களையெல்லம் திரையிடும் விழாக்கள் அதிகம் நடக்கத் தொடங்கியிருப்பது நல்ல மற்றம்.


சரி இது பற்றி மற்று மொரு பதிவில் விரிவாக பேசுகிறேன்.

தெருக் குறிப்புக்கள். . .

நான் ஊடகக் காரனாக அலைகிற போதும் மக்களோடு வாழ்ந்து ஆவணப் படங்களை எடுகிறபோதும் சந்திக்கிற விடயங்களைப் பகிர்ந்துகொள்ளுவதற்கான பதிவு இது.இப்போது கடலூர் மக்கள் பற்றிய எனது படத்திற்கான பிற் தாயரிப்பில் உள்ளேன் இன்னும் சிலதினங்களில் அது பூர்த்தியாகிவிடும். அதன் பின்னர் அது பற்றி விபரமாக பேசுகிறேன்.

எனது சொந்தப் பணத்தில் கடலூர் சிப்காட் மக்களைப் பற்றிய படத்தை எடுத்தேன். எமது நிகரி திரைப் படக் குழுவின் இத்தகய முயற்சிகள் எல்லாவற்றிக்கும் பணம் பிரசனைதான் . எமது வேறு ஊடகப் பணிகளுக்கான ஊதியமே இத்தகய ஆவணப் படங்களுக்கான முதல்.எனினும் கடலூர் படத்தினை ஒளிபரப்பு செய்வதற்கு ஒரு தொலைகாட்சியில் வாய்புள்ளதாக தெரிகிறது. அது எது என்பதையும் எப்போது என்பதையும் முடிவானதும் சொல்கிறேன்.

நித்தம் நித்தம் என் முன்னே நிகழும் அவலங்களையும் அழகுகளையும் மனிதர்களையும் ஆவணப் படுத்தி அடுத்த தலைமுறைக்கும் அதைவிட இது எதுவும் தெரியாத என் சக மனிதனுக்கு கொடுப்பதே என் படங்களின் வேலை.தரமான பர்வையாளனின் ஒத்துழைப்பே இதனை இன்னமும் செழுமைப் படுத்தும்.

இந்த பதிவும் இத்தகைய பின்னணியிலான தெருவோரக் குறிப்புகளாகவே இருக்கும்.

வணக்கம்

இரண்டு தளங்கள் இப்போது எனது கரங்களில் உள்ளன.

ஏற்கனவே என் கைவசம் உள்ள www.somee.blogspot.com புதிய பிளக்கரில் என்னால் சிக்கவைக்கப் பட்டு தமிழ்மணத்துடன் இணைவற்கு சிரமப் படுகிறது.எனவே தெருப்பையன் மற்றும் மௌனம் ஆகிய இரண்டு வெவ்வேறான பதிவுகளில் வெவ்வேறு விடயங்களை உங்களோடு பேசுவேன்.
தெருப்பையன் பதிவு பெருமளவில் என் ஆவணப் படங்கள் பற்றியும் நான் ஊர்சுற்றுகிறபோது பார்க்கிற என்னைப் பாதிக்கிற,உணர்கிற விடயங்கள் பற்றியும் திரைப் படங்கள் பற்றியும் எமது நிகரி திரைப்பட குழு பற்றியும் அதிகம் பேசும்.

நிறய பேசுவோம் எமக்கான இடைவெளிகளைக் குறைத்து புரிதல்களோ ஏதாவது உருப்படியாகச் செய்வோம்

வணக்கம்.

இது எனது முதல் பதிவு பிளக்கர் செய்த புதுமையினால் அடுத்தவனிடம் கடன்வாங்கி ஒரு பத்திவினை உருவாக்கியுள்ளேன். எழுதுவதற்கு நேரமற்ற நண்பர் ஒருவர் வைத்திருந்ந்த பதிவை நண்பர் சயந்தனின் புண்ணியத்தில் கேட்டு வங்கிக் கொண்டது.

எனது சொந்த பதிவு வரும் வரை கடன்பதிவில் பேசுவேன். பின்னர் இது அந்த நண்பருக்கு தேவையில்லையெனில் எனது பதிவாகத் தொடரும். இது இப்போது முழுக்க முழுக்க எனது கட்டுப் பாட்டில் உள்ள பதிவு.

சோமி